sorry folks only in tamil!!
முன்னொரு காலத்தில் ஆயகலைகள் அனைத்திலும் தேர்ந்த ஒரு மாமன்னன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அவனது திறமைகள் மீது அபார நம்பிக்கை. சொல்லப் போனால் நிறைய கர்வமும் கூட.
குறிப்பாக, சதுரங்க போட்டியில் அந்த மன்னன் படு கில்லாடி. போவோர் வருவோரையெல்லாம் விளையாட அழைத்து அவர்களை நிமிடத்தில் தோற்கடிப்பதில் அவனுக்கு அலாதி ஆனந்தம். அவனிடம் சதுரங்க போட்டியில் தோற்றுப் போகாத மன்னர்களே அந்த காலகட்டத்தில் இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மன்னர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்கள், வியாபாரிகள், முனிவர்கள், வீரர்கள் அனைவரையும் அழைத்து ஏதாவது பந்தயம் கட்டி அவர்களை வீழ்த்துவதே அவனது பொழுது போக்கு. அவனிடம் மூக்கறுபட்டவர்கள் ஏராளம்.
ஒருநாள் அவன் நகர உலா போகும் போது, பரதேசி தோற்றம் கொண்ட ஒருவரைப் பார்க்கிறான். ஆனால் அவரோ அரசரை கண்டு கொள்ளாமல் நேராக தன பாதையில் நடந்து செல்கிறார். மக்களோ அவரைப் பார்த்து பணிவுடன் வணக்கம் தெரிவிக்கின்றனர்.
அரசனுக்கு எரிச்சலான எரிச்சல். ஒரு மன்னனை அதுவும் தன்னைப் போன்ற ஒரு மகா மேதாவியைப் பார்த்து உரிய மரியாதை செய்யாமல் போகின்ற இந்த பரதேசி யார் என்று கோபம் அவனுக்கு. இந்த பரதேசியை எப்படியாவது மக்கள் முன்னர் மட்டம் தட்டி அவமானப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்து அவரை சதுரங்க போட்டிக்கு அழைக்கின்றான்.
அதுமட்டுமல்லாமல் ஒரு பந்தயம் வேறு கட்டுகிறான்.
அதாவது, ஒருவேளை, மன்னன் தோற்றால் அந்த முனிவர் கேட்பது எது வேண்டுமானாலும் கொடுக்கப் படும். மாறாக முனிவர் தோற்றாலோ அவர் அரசனிடம் சேவகனாக வாழ்நாள் முழுக்க ஊழியம் செய்ய வேண்டும்.
முனிவரும் ஒப்புக் கொள்கிறார்.
ஆட்டம் தொடங்குகிறது.
அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, போட்டியில் முனிவர் எளிதில் வென்று விடுகிறார்.
பந்தயப் படி, இப்போது, வெற்றி பெற்ற அவர் மன்னனிடம் எது வேண்டுமானாலும் கேட்க வேண்டிய முறை.
மன்னனுக்கு ஏகப் பட்ட பயம். பாதி மண்ணைக் கேட்பானோ இல்லை ஏராளமான பொன்னைக் கேட்பானோ இல்லை கதைகளில் வருவது போல தனது பெண்ணையே கேட்டு விடுவானோ என்றெல்லாம் அஞ்சி நடுங்குகின்றான்.
முனிவரோ, "ஒரு அரிசி மட்டும் சதுரங்க பலகையின் முதல் கட்டத்தில் வையுங்கள், பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் முதல் கட்டத்தில் இருப்பது போல அரிசியை இரண்டு மடங்காக்கி இறுதியில் அறுபத்து நான்காவது கட்டத்தில் வரும் அரிசியின் அளவை மட்டும் எனக்குக் கொடுங்கள், போதும்" என்று மன்னனிடம் கேட்கின்றார்.
"யாரடா இவன்? நாம் நினைத்ததைப் போலவே ஒரு பைத்தியமாக இருக்கின்றான், மண் வேண்டும் பொன் வேண்டும் என்றெல்லாம் கேட்காமல் ஒரு அரிசி குவியல் கேட்கின்றான். நல்ல வேளையாக நாம் தப்பித்தோம்" என்று சந்தோசப் படும் அரசன் அவர் கேட்டபடி அரிசி கொடுத்து அனுப்புங்கள் என்று கட்டளையிடுகிறான்.
முதல் கட்டத்தில் ஒரு அரிசி, இரண்டாவதில் இரண்டு அரிசி. மூன்றாவதில் நான்கு, நான்காவதில் எட்டு, ஐந்தாவதில் பதினாறு என்று பெருகிக் கொண்டே போகும் அரிசி சதுரங்க பலகையின் பாதிப் பலகையை தாண்டுவதற்கு முன்னரே அரண்மனை ஊழியர்களுக்கு மூச்சு முட்டி விடுகிறது.
அரசாங்கத்தின் கிடங்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள அரிசி மொத்தத்தையும் கொண்டுவந்தாலும் போத வில்லை. (அவர் சொன்ன கணக்குப் படி அரிசி வேண்டுமென்றால், கடைசி கட்டத்தில் பத்து எவரெஸ்ட் மலை அளவு அரிசி அடுக்க வேண்டும்)
கர்வம் அழிந்த மன்னன் அந்த ரிஷியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றான்.
இது ஏதோ நீதிக் கதை மட்டுமல்ல. "கூட்டலின்" மதிப்பை புரிய வைக்கும் கதையாகும்.
உதாரணத்திற்கு பாலு மற்றும் கோபு என்ற இரு நண்பர்களை எடுத்துக் கொள்வோம்.
இருவரும் தமது இருபந்தைந்தாவது வயதில் வேலைக்கு செல்கின்றனர். இருவருக்கும் ஒரே சம்பளம். பாலு கொஞ்சம் பொறுப்பானவன். மாத சம்பளத்தில் ஆயிரம் ரூபாய், துவக்கத்தில் இருந்தே சேமிக்க ஆரம்பிக்கின்றான். கோபு ஜாலி டைப். இளம் வயது என்ஜாய் செய்வதற்கானது. திருமணமாகி பொறுப்பு வந்தவுடன் சேமித்தால் போதுமானது என்று சம்பளப் பணத்தை முழுவதும் செலவு செய்கிறான்.
திருமணம் முடிந்து குடும்ப பொறுப்பு வந்தவுடன், பாலுவை துரிதமாக மிஞ்ச வேண்டுமென்று முடிவு செய்யும் கோபு, தனது முப்பத்தைந்தாவது வயதில் இருந்து, மாதம் இரண்டாயிரம் ரூபாய் (அதாவது பாலுவை போல இரு மடங்கு) சேமிக்க ஆரம்பிக்கின்றான். அதே சமயம் பாலு தனது ஆயிரம் ரூபாய் சேமிப்பை அதிகப் படுத்தாமல் அதே அளவில் தொடருகிறான்.
(மாத வட்டி சராசரியாக எட்டு சதவீதம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.)
இருவரும் தமது ஐம்பத்தைந்தாவது வயதில் தமது சேமிப்பினை திரும்பப் பெறுகின்றனர்.
யாரிடம் அதிகப் பணம் உள்ளது என்று கணியுங்கள் பார்க்கலாம்.
சந்தேகமே வேண்டாம். பாலுதான் அதிகம்.
பாலுவிடம் இருப்பது கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் ரூபாய். கோபுவிடம் இருப்பது
பன்னிரண்டு லட்சம் மட்டுமே.
இத்தனைக்கும் முப்பது வருடத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் பாலு போட்ட பணம் 3,60,000. இருபது வருடத்தில் மாதம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் கோபு போட்டதோ 4,80,000.
எங்கிருந்து வந்தது மீதப் பணம்?
அதுதாங்க "கூட்டலின் வழியாக வரும் பெருகலின்" மகிமை.
எனவே சேமிக்க ஆரம்பியுங்கள். அதுவும் இளம் வயதிலேயே சேமிக்க ஆரம்பியுங்கள்.
காலத்திற்கு ஏராளமான சக்தி உண்டு.
காலம் வெறும் மண்ணைக் கூட பொன்னாக்கி விடும்